Tuesday 14 October 2014

குறும்பட விருது விழா - 2014: வென்றது 'சுட்டவடு'


லொயோலா கல்லூரி ஊடகக் கலைகள் துறை பரிவு மாத இதழுடன் இணைந்து மூன்றாவது ஆண்டாக நடத்திய குறும்படப் போட்டி முடிவுகள் அக்டோபர் 10, 2014 அன்று நடைபெற்ற விருது விழாவில் அறிவிக்கப்பட்டது. தமிழ்த் திரையுலக பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். 


இடமிருந்து வலம்: திரைக்கதை ஆசிரியர் முருகேஷ் பாபு, ஒளிப்பதிவாளர் ராமநாத் ஷெட்டி, நடிகர் வித்தார்த், ‘அட்டக்கத்தி’ இயக்குநர் பா.ரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் நண்பராக நடித்திருக்கும் நடிகர் அன்பு, ‘ஆள்’ இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணா, ‘பரிவு’ மாத இதழ் ஆசிரியர் ச.சக்திவேல்.

தமிழகம் முழுவதிலிருந்தும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்துவரும் கல்லூரி மாணவர்கள் தங்கள் குறும்படப் படைப்புகளை அனுப்பி வைத்திருந்தனர்.

புகைப் பழக்கத்தினால் நாவின் சுவை அற்றுப்போதலை படமாக்கியிருந்த ‘சுட்டவடு’ சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  நடுவர்கள் முருகேஷ் பாபு மற்றும் ராமநாத் ஷெட்டி பேசுகையில், மாணவர்களின் படைப்புகள் எங்களுக்கும் கற்றுத் தருபவையாக இருந்தன என்று பாராட்டினர்.

நடிகர் வித்தார்த் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், நீங்கள் செய்வதை முழு மனதோடு செய்யுங்கள். நிச்சயம் வெற்றி கிட்டும் என்று பேசினார்.

அட்டக்கத்தி, மெட்ராஸ் திரைப்படங்களின் மூலம் மாணவர்களைத் தன் பக்கம் இழுத்திருக்கும் இயக்குநர் ரஞ்சித், சாதிய கட்டிலிருந்தும் மதவாத கட்டிலிருந்தும் வெளியே வாருங்கள் என்று மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

‘ஆள்’ இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணா லொயோலா கல்லூரியில் படிக்க விரும்பியதாகவும் ஆனால் இங்கு அனுமதி மறுக்கப்பட்டவர் அதே இடத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பது தனக்கு பெருமையளிப்பதாகவும் கூறினார்.

பரிவு மாத இதழ் ஆசிரியர் சக்திவேல் ஊடகக் கலைகள் துறையுடன் சேர்ந்து இப்போட்டியை நடத்தி வருங்கால திரையுலகப் படைப்பாளிகளை ஊக்குவிப்பதில் தன் பங்கு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

ஊடகக் கலைகள் துறைத் தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார் இந்நிகழ்ச்சியை சிறப்புர திட்டமிட்டு நடத்தியதற்காக பேராசிரியை முனைவர் ஞானபாரதி மற்றும் சகப் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துக்களைப் பதிவு செய்தார்.

Monday 13 October 2014

SoundCameraAction.Com-ன் திரைக்கதைப் போட்டி


98 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் நல்ல கதைகளைக் கண்டெடுப்பதிலும், சிறந்த திரைக்கதைகளை அமைப்பதிலும் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த ஏற்றத்தாழ்வைப் போக்க சமீப காலமாக சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த முயற்சியில் கல்வியாளர்களின் பங்காக, தமிழ் திரையுலகிற்கு சிறந்த கதைகளை தேடித் தரும் வகையில் 'கதை சொல்லப்போறோம்' என்ற நிகழ்வை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும், 'தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் ஊடகங்களுக்கான கதைக்கருக்கள்' என்ற தலைப்பில் இந்த ஆண்டு துவக்கத்தில் ஒரு கருத்தரங்கமும் நடத்தியிருந்தோம். இப்போது SoundCameraAction.Com நடத்தியிருக்கும் சிறந்த திரைக்கதைக்கான போட்டி பாராட்டுக்குரியது. இதனால் வெள்ளித்திரை நல்ல திரைக்கதைகளைக் காணும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

SoundCameraAction.Com அறிவித்துள்ள 5 இறுதிப் போட்டியாளர்கள் பட்டியலில்  ஊடகக்கலைகள் துறைத்தலைவர் பேரா.லாரன்ஸ் ஜெயக்குமார் அவர்களின் திரைக்கதையும் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

1000 கிலோ மீட்டர் - ரிஷி குமார்
#221 Bakery Street - S.மொஹமெத் ரசூல்
பக்கினி - S.கோமலேஷ்வரன்
போதனூர் தபால் நிலையம் - பிரவீன்
உயிர்மெய் - S.லாரன்ஸ் ஜெயக்குமார்