Tuesday 13 January 2015

நிகழ்களம் 2014 - அறிக்கை

"பண்பாட்டு வேர்களான நம் முன்னோர்களை மறந்துவிட்டு, நம்மை ஏமாற்றும் திரைப்பட கதாநாயகர்கள் பின்னால் அலைந்து கொண்டு இருக்கிறோம்." - படத்தொகுப்பாளர் பீ.லெனின்.


துறை தலைவர் லாரன்ஸ் ஜெயக்குமார், நகைச்சுவை கலைஞர் திருச்சி சிவா, தயாரிப்பாளர்-படத்தொகுப்பாளர் பீ.லெனின், பேரா.அ.ராஜநாயகம் அடிகள்

சென்னை, டிசம்பர்  13, 2014: சென்னை லொயொலா கல்லூரி ஊடகக் கலைகள் துறை "நிகழ்களம்" என்ற தலைப்பில் ஆண்டுதோறும் நடத்தி வரும் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஊடகப் போட்டிகள் இந்த ஆண்டும் சிறப்பாக நடைப்பெற்றது. தேசிய விருது பெற்ற இயக்குநர், எடிட்டர் பீ. லெனின், அருட்தந்தை ச.ராநாயகம், நகைச்சுவை நடிகர் திருச்சி சரவணகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று போட்டிகளைத் தொடங்கி வைத்தனர்.

அருட்தந்தை ச.ராநாயகம் "சோதனைகளை சாதனைகளாக இன்றைய மாணவர்கள் பார்க்க வேண்டும். போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் ஜெயிக்கும் வித்தைகளை மாணவர்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும்" என்று தனது வாழ்த்துரையில் அறிவுறுத்தினார்.

படத்தொகுப்பாளரும், தற்போது பதினாறு லட்ச ரூபாயில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட காத்திருக்கும் பீ.லெனின் இந்திய தணிக்கை முறையின் கட்டுப்பாடுகளை விமர்சித்ததோடு,இன்று வரக்கூடிய திரைப்படங்களும் அதன் கதாநாயகர்களும் மக்களை ஏமாற்றுவதையே குறியாக வைத்துள்ளனர், நாம் நம்முடைய வேர்களான முன்னோர்களையும், அவர்கள் பின்பற்றிய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மறந்து விடக்கூடாது. வட இந்தியாவில் இரயிலில் பயணம் செய்த பெண், பிரசவ வலியால் துடிக்க, பல பெண்களின் உதவியை அவளது கணவர் நாடியபோது யாரும் உதவாத நிலையில் அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த திருநங்கைகள் சிலர் அப்பெண்ணிற்கு உதவியாக நின்று பிரசவம் பார்த்துள்ளனர். தாயையும், குழந்தையையும் காப்பற்றி, தாங்கள் பிச்சை எடுத்த பணத்தை அந்தக் குழந்தைக்கு கொடுத்து வழியனுப்பியுள்ளனர். இத்தகைய மனிதநேயம் மிக்கவர்களை நாம் வெறுத்து ஒதுக்குகின்றோம். நம் வீட்டில் இப்படி ஒரு பிள்ளை இருந்தால், கேலி செய்ய நமக்கு மனம் வருமா…”  என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
துவக்க விழாவில் பேசிய நகைச்சுவை நடிகர் திருச்சி சரவணகுமார், இந்தியர்கள் விருந்தில் கூட மருந்து வைக்க மாட்டார்கள், என்று ஒரு குட்டிக் கதையை மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.

பின்னர், ஊடக விநாடி வினா, வெல்வதற்கு ஒரு நிமிடம், மொழிபெயர்ப்பு போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் தமிழ் வழியில் ஊடகக் கல்வி கற்றுத்தரப்படுவது லொயொலாவில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஊடகக் கலைகள் துறை நடத்திய போட்டிகளில் எந்தத் துறையைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பாக கணிதத் துறையைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பரிசுகளை அள்ளிச் சென்றனர். சன் மியூசிக் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரியோ, நிகழ்ச்சி தயாரிப்பாளர் பிரிட்டோ ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றிப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சி குறித்து மாணவ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில் "துறையின் ஆண்டு விழாவாக அரங்கேறிய நிகழ்களம் 2014’- முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களாகிய நாங்கள் ஒருங்கிணைந்து நடத்திய விதம் எங்களின் தலைமை பண்பு மற்றும் முன்முனைதலை பெரிதும் ஊக்குவிக்கும் விதமாக இருந்தது. மேலும் இவ்வகையான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, ஊடக மேலாண்மை குறித்த புரிதலை எங்களுக்கு நேரடி களப்பணியாக அறிமுகப்படுத்தியதாக உணர்ந்தோம்.” என்றார்.

மிகவும் சுவாரசியமாகவும், புதுமையாவும் இருந்ததாக போட்டியில் வெற்றிப் பெற்ற செல்வி வி.லீனா தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

விழாவின் இறுதியில் ஊடகக் கலைகள் துறையை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பேராசிரியர்களுக்குப் பரிசாகக் கொடுத்த கேலிச்சித்திரம் அனைவர் மத்தியிலும் சிரிப்பு அலைகளை ஏற்படுத்தியது.

இந்நிகழ்வினை துறைத்தலைவர் சா.லாரன்ஸ் ஜெயக்குமாரின் தலைமையில் பேரா.சாம்சன் துரை பொறுப்பேற்று நடத்தினார். முனைவர் மா.ஞானபாரதி மற்றும் பேரா.ஆரோக்கியராஜ் அவர்களும் தங்களுடைய சிறந்த பங்களிப்பினை நல்கி விழாவும், போட்டிகளும் மிகச்சிறப்பாக நடைபெற உதவினர்.



- Reported by M.Rajesh (13PMA11)