Wednesday 24 February 2016

பத்தாம் ஆண்டு நிறைவு விழா - அறிக்கை

19-பிப்ரவரி-2016 அன்று முதுகலை ஊடகக் கலைகள் (M.A. Media Arts) படிப்பு தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெறுவது விழாவாகக் கொண்டாடப்பட்டது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், ஊடகத் துறையைச் சார்ந்த பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். முதுகலை ஊடகக் கலைகள் பயின்ற முன்னாள் மாணவர்கள், இத்துறை மாநில அளவில் நடத்திய போட்டிகளில் கலந்துகொண்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.


பயிலரங்கம்:
காலை 10 மணிக்கு துறை பேராசிரியர்கள் குத்துவிளக்கேற்றி பயிலரங்கைத் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ஊடகத் துறையில் சாதித்துக் கொண்டிருக்கும் முன்னாள் மாணவர்கள் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுடன் தங்கள் ஊடகத் துறை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

 


திரைப்படத் துறை:
மாணவர் ஜெயசந்திர ஹாஷ்மி தயாரித்த குறும்படம், 'மௌன மொழி' திரையிடப்பட்டபோது அரங்கிலிருந்த அனைவரது கண்களும் நீர்த்தது. இலங்கையில் தவிக்கும் தமிழ் மக்களைப் பற்றியது அந்த குறும்படம்.

பல்வேறு திரைப்படங்களில் பாடல்களை எழுதிவரும் மோகன்ராஜன், பின்ணனி பாடகர்கள் ஜெகதீஷ், பிரவீன், மற்றும் திரைப்படத் துறையில் பணிபுரியும் பல முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயிலரங்கில் பங்கேற்க வந்திருந்த மாணவர்கள் கூறினர்.




தொலைக்காட்சி துறை:
விஜய் தொலைக்காட்சி 'கலக்கப்போவது யார்-5' நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஜெகன், புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக பணிபுரியும் சித்ரவேல், மன்னர் மன்னன், செய்தி நிருபர்கள் ஸ்டாலின், அருண், பாலிமர் செய்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணிபுரியும் சுதர்ஷன் மற்றும் பலர் தங்களுடைய தொலைக்காட்சித் துறை அனுபவங்களைப் பகிர்ந்தனர்.



பிற ஊடகத் துறைகள்:
உணவு இடைவேளைக்குப் பின்னும் தொடர்ந்து மேனாள் மாணவர்களின் அனுபவப் பகிர்வு தொடர்ந்தது. திரைப்படம், தொலைக்காட்சி மட்டுமல்லாமல், வானொலி, அச்சு, கல்வி, freelance photography, event management, என்று பல்வேறு தளங்களில் பணிபுரியும் எமது மாணவர்கள் முன் வைத்த பகிர்வுகள் மற்றவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.



உணவு இடைவேளைக்குப் பிறகு அயர்வு ஏற்பட்டுவிடாமல் இருக்க, இடையிடையே கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

பரிசளிப்பு விழா:
மாலை நான்கு மணிக்கு தொடங்கிய பரிசளிப்பு விழாவில், 'ஏப்ரல் மாதத்தில்' இயக்குநர் S.S.ஸ்டான்லி, பரிவு மாத இதழ் ஆசிரியர் சக்திவேல், RJ ராஜேஷ், மற்றும் 'ஆகம்' திரைப்படக் குழுவினர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

ஜப்பானிய இயக்குநர்கள் வேறு எந்த மொழியையும் கற்றுக்கொள்ளாமலேயே சர்வதேச திரைப்படங்களை இயக்குகின்றனர். தமிழ்நாட்டிலும் தமிழில் கற்றுக்கொள்வதற்கு நமது மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்று இயக்குநர் S.S.ஸ்டான்லி கூறினார்.



வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிக்கும் இந்தியர்கள் இந்தியாவிலேயே தங்கி தொழில் செய்தால் இந்தியா அப்துல் கலாம் சொன்ன வல்லரசாக மாறும் என்பது ஆகம் படத்தின் ஒரு வரிக் கதை என்று கதை எழுத்தாளர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் கூறினார்.



இறுதியாக, ஊடகக் கலைகள் துறை நடத்திய பத்து போட்டிகளுக்கான முதல் மூன்று வெற்றி பரிசுகளும், இரண்டு ஆறுதல் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.


முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், வருங்கால மாணவர்கள் என்று முச்சங்கமமாகத் திகழ்ந்த 10-வது ஆண்டு கொண்டாட்டம் ஆடல், பாடல், நடனத்துடன் இனிதே நிறைவுற்றது.

- அறிக்கை: சாம்சன்

No comments:

Post a Comment