Friday 23 September 2016

ஊடகங்களே சமூக மாற்றத்திற்கு வித்து - event report

“ஊடகங்கள் சமூகத்தின் மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும்” - விளக்கினார் லொயோலா கல்லூரியின் சமூக பணி துறை பேராசிரியர் எட்வர்ட் சுதாகர்.


லொயோலா கல்லூரியில் முதுகலை ஊடகக் கலைகள் துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களின் முன்னேற்றத்திற்கும்  தேவையான அறிவுரைகளை வழங்கும் பொருட்டு வாரம் ஒரு ஊடகவியலாளரை அழைத்து அவரது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு நடைபெறுகின்றது.  அந்த வரிசையில், ஊடக ஆய்வியல் புலக் காட்சியரங்கத்தில் நேற்று (20.09.2016) நடைபெற்ற நிகழ்வில் பேரா.எட்வர்ட் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.
 
அவர் கூறியதாவது: 
சமுதாய மாற்றத்திற்கு மிகவும் இன்றியமையாதது ஊடகம். சமூகத்தில் நிகழும் சமுதாய சீர்கேடுகளை தெரிவிக்கும் மிக முக்கிய பொறுப்பு ஊடகவியலாளர்களிடம் இருக்க வேண்டும். அது திரைப்படம், அச்சு, வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். ஊடகத்தில் நீங்கள் படைக்கும் படைப்பு அனைத்தும் மக்களுக்காக மட்டுமே. அப்படி மக்களுக்காக படைக்கும் படைப்புகள் மக்களின் மனமாற்றத்திற்கு வித்திடும் வகையில் அமைந்தால் நம் சமூகம் விரைவில் நல்வழிபடும்.

சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை எடுத்துக் காட்டி அவற்றில் இருந்து மக்களை விடுபட செய்வதில் ஊடகவியலாளர் பெரும் பங்கு வகிக்கின்றனர். தற்கால இளைஞர்கள் அதிநவீன செயல்திறன் கொண்ட அலைபேசிகள் மூலம் உள்ளங்கையில் உலகை அடைத்து வைத்துள்ளனர்.  சமூக வலைதளம் போன்றவை  சமூக மாற்றத்திற்கு மிகவும் ஏதுவாக உள்ளது. இவ்வாறு ஊடகத் துறையைப் பற்றிய தனது பார்வையைப் பகிர்ந்துகொண்டார்.


மேலும் ஊடகப் பார்வையை தவிர்த்து சமூக அக்கரை கொண்டு சில கருத்துகளைப் பகிர்ந்தார்.  அவையாவன:

இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களைப் பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. இவர்கள் படும் துயரங்கள் வெளியில் தெரிய வேண்டும். ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானால் தான் அவன் அடுத்த நிலைக்குப் போக முடியும். 
உலகில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் அனைத்திற்கும் ஒரு பின்னணி உள்ளது.  அதன் பின் மிகப்பெரிய வியாபாரம் மக்களை வைத்து நடைபெறுகிறது. அதுபோன்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் அதன் பின்புலம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.  தினசரி நாளேடுகளை படிக்க வேண்டும்.
 
இதுபோன்ற பல சமூக நடப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் கொடுத்தார்.

 
இறுதியாக, அவருடைய வருகைக்கும் சொற்பொழிவிற்கும் நன்றி கூறி இரண்டாம் ஆண்டு மாணவர் வா.கிரிதரன் நினைவு பரிசினை வழங்கினார்.

ஒளிப்படம்: ராஜ் பிரஷாந்த் (15PMA08) - PrasanthVisCom@Gmail.com
அறிக்கை:  தணிகைவேல் (15PMA03) - VeluVelu795@Gmail.com